தமிழ்நாட்டில் நவம்பர் 2026 முதல் மே 2027 வரையிலான காலகட்டத்தில், மாலை நேர உச்சகட்ட மின் தேவையைச் சமாளிப்பதற்காக 1,.000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
இதன்படி, மாநிலத்தில் நிலவும் மின் தேவையை கருத்தில் கொண்டு, நவ.1 முதல் அடுத்தாண்டு மே 31-ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஏற்படும் உச்ச மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மின் கொள்முதல் நடைபெறும்.
இதற்காக, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மின் உற்பத்தியாளர்கள் மற்றும் மின் வர்த்தகர்களிடமிருந்து நிலையான அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய மின்சார அமைச்சகம் கடந்த 30.03.2016 அன்று வெளியிட்ட குறுகிய கால மின் கொள்முதலுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் 21.02.2022 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட விதிகளின்படி இந்த ஏல நடவடிக்கைகள் நடைபெறும்.
ஒப்பந்தப்புள்ளிகளை டீப் எனப்படும் மின்னணு ஏல இணையதளப் பக்க வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இந்த டெண்டர் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் நிபந்தனைகளை தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.